இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் இரண்டு போட்டிகளும் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள், மறைந்த கேப்டன் டாம் மூர்ஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அனைவரும் கையில் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.
கேப்டன் சர் தாமஸ் மூர்
இவர் 30 ஏப்ரல் 1920 ம் ஆண்டு இசபெல்லா மற்றும் வில்சன் மூர் என்ற தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் தந்தை ஒரு கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தாய் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார். மூர் கெய்லி கிராமர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சிவில் பொறியியல் துறையில் பயிற்றுநர் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்தின் டியூக் ஆஃப் வெலிங்டன் ரெஜிமண்டில் 8 வது பெட்டாலியின் படைப்பிரிவில் 1940 ல் சேர்ந்தார். பின்னர் இவர் அலுவலர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி முடித்த பின் இரண்டாவது லியூடெனன்ட் ஆகப் பதவி பெற்றார்.
இரண்டாம் உலகப் போரின் போது மூர் இந்தியா மற்றும் பர்மாவில் பணிபுரிந்தார். பின்னர் காப்பு போரின் பயிற்றுவிப்பாராக நியமிக்கப்பட்டார். போர் முடிந்த பின்னர் ஒரு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்தார்.
மனிதத்தின் உச்சம்
கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா எனும் பெருந்தொற்றால் உலகமே செய்வது அறியாது விழி பிதுங்கிய போது, இவர் மட்டும் இராணுவ வீரனாக களத்தில் கர்ஜனையோடு களமிறங்கினார். கொரோனா எனும் போரில் முன்னின்று போராடும் களப்பணியாளர்களான மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நாம் தான் ஆயுதமாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை அனைவரின் மனதிலும் புகுத்தினார். தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாட எண்ணிய கேப்டன் டாம் மூர், அதனை மக்களுக்கானதாகவும், மனிதத்தின் ஆணி வேரின் உயிர் நாடியை ஆக்சிஜனேற்றம் செய்யும் தினமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
100 வது பிறந்தநாள்
கேப்டன் டாம் மூர் அவர்கள் தனது 99 வது வயதில் 6 ஏப்ரல் 2020 அன்று NHD CHARITIES அமைப்பின் சார்பாகவும், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் மக்களுக்காகவும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காகத் தனது தோட்டத்தில் நடைப்பயணம் மேற்கொண்டார். தனது 100 வது பிறந்த நாளின் போது 1000 பவுண்ட் நிதியை சேகரிப்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இவரின் நெஞ்சுரத்தின் வேகக்கணை அந்த தொகையை 39 மில்லியன் பவுண்ட்டாக உயர்த்தி மானுட கோட்டையின் உச்சத்தில் இவரை அமர வைத்தது.
24 நாட்களின் முடிவில் இவரின் 100 வது பிறந்தநாள் முடிவில் இந்த தொகை 39 மில்லியன் பவுண்ட்டையும் தாண்டியது. இவரின் பிறந்த நாள் அன்று உலகத்தின் அத்தணை ஆத்ம ஜீவன்களும் இவருக்கு வாழ்த்து தெரிவிக்க தவறாமலில்லை. இவரின் இந்த அளப்பரிய தொண்டினை பாராட்டி பிபிசி நிறுவனம் Sports personality of the year helen Rollason விருதை 2020 ம் ஆண்டு வழங்கி கௌரவித்தது. மேலும் மைக்கேல் பால் உடன் இணைந்து " You will never walk alone" என்ற பாடலை பாடினார். இது பெரும் வெற்றியையும், அளவில்லா நிதியையும் அளித்தது. இதன் மூலம் பெறப்பட்ட நிதியையும் அதே தொண்டு நிறுவனத்திற்கு அளித்தார்.
மேலும் அவரின் பிறந்தநாள் அன்று Royal Air force மற்றும் British army இணைந்து flypasts எனும் மரியாதை செலுத்தினார். இது முக்கிய தினங்களுக்கு மட்டுமே அரங்கேறும் நிகழ்வாகும். மேலும் இவருக்கு 150000 பிறந்தநாள் அட்டைகள் மூலம் வாழ்த்து செய்தியும் அனுப்பித் திக்குமுக்காட வைத்தனர். மேலும் இங்கிலாந்தின் இராஜ்ஜிய அரங்கமான windsor castle க்கு இங்கிலாந்து இராணியின் மரியாதை நிமித்த அழைப்பை ஏற்றுப் பங்கேற்றார்.
இவரின் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையைத் தனது 100 வது பிறந்தநாளில் அரங்கேற்றிய கேப்டன் டாம் மூர் கடந்த ஜனவரியில் ஏற்பட்ட காய்ச்சலால் பெட்போர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து, துயரத்தின் உச்சம் அடைந்தார். பின்னர் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் பாசிட்டிவ் பெற்று, கடந்த 2 பிப்ரவரி 2020 ல் இயற்கை எய்தினார்.
இந்தமாமனிதனின் மரணம் உலகத்தின் சப்த நாடிகளை ஒரு நிமிடம் அசைக்காமல் இல்லை. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள், சென்னையில் நாளை நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாட உள்ளனர். மனிதத்தை உயிர்ப்படைய செய்த மகானுக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்.