இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்துக்குச் சனி திசை தொடங்கி விட்டது. முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள் கூட இல்லாத நிலையில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராலே கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று பயிற்சிக்காக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரரான சாக் கிராலே தனது அறையில் இருந்து மைதானத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். ஸ்டேடியத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது மார்பிள் தரையில் திடீரென அவர் வழுக்கி விழுந்தார்.
இதில் அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வலது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் கையில் பேண்டேஜ் போடப்பட்டது. இதனால் அடுத்த 2 போட்டிகளிலும் சாக் கிராலேவால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணி வீரர் காயமடைந்து வெளியேறி உள்ளது அந்த அணிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.