சசிகலா காரில் கொடி பறந்ததுக்கே கதி கலங்குகிறதே! இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம், ஏராளம். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் இந்த துரோகிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அரங்கேற்றங்கள் நிகழப் போகிறதே.. என்று நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் அதிமுகவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து வரும் 8ம் தேதி காலையில் சசிகலா சென்னை திரும்புகிறார். அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சசிகலா தரப்பினரின் அதிகாரப்பூர்வ நாளேடானா நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் இன்று(பிப்.6) வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
அம்மாவின் கொள்கைகளைப் பின்பற்றும் உண்மையான வாரிசு யார்? ஆளுமைமிக்க தலைவி யார் என்று கேட்டால் சாதாரணத் தொண்டனும் சின்னம்மா என்று சொல்வார்கள். தடம்மாறிய கொள்கைகளைக் காவு கொடுத்த துரோகக் கூட்டம் யார் என்று சாதாரணத் தொண்டரும் சொல்வார்கள். அம்மாவின் பாதையில் கழகத்தை வெற்றி நடை போடச் செய்யும் ஆற்றல் தியாகத் தலைவி சின்னம்மா ஒருவருக்குத்தான் உண்டு. இது மக்களின் எதிர்பார்ப்பு. தொண்டர்களின் திடமான நம்பிக்கை. அம்மாவோடு 33 ஆண்டுகள் உறுதுணையாக இருந்து கட்சி, ஆட்சிப் பணிகளில் நன்கு தேர்ந்தவர் என்று அனைவரும் அறிவார்கள்.
தீயசக்திகளாலும், துரோக பச்சோந்திகளாலும் நமக்கு இன்னும் இடையூறு இருக்கத்தான் செய்யும். பயந்து விடாதே, பதுங்கி விடாதே. ஆட்சி அதிகாரத்தால் மிரட்டல்கள் பறக்கத்தான் செய்யும். நமது உழைப்பு வீண் போகக் கூடாது. குறிக்கோள், லட்சியம், திடமான நம்பிக்கையோடு சின்னம்மா தலைமையில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கை நோக்கிச் செல்வோம். வீழ்த்த நினைப்போரை வீழ்த்த பயமறியா படை வீரர்களாக திரள்வோம். இது அம்மாவின் சிங்கப்படை, சின்னம்மாவின் சீறும் படை, எல்லோரையும் வெல்லும் படை என்பதை நிரூபிப்போம்.இந்த சமயத்தில் நமது கழகத்தின் ஒவ்வொரு அடலேறுகளுக்கும் ஆற்றலும் சக்தியும் பீறிட்டு எழ வேண்டும். தீயசக்திகள், துரோகிகளின் பொய் முகங்களை கிழித்தெறிந்து துவம்சம் ஆக்குவோம் என்ற உணர்வுகள் மேலோங்கி எழ வேண்டும். சின்னம்மா தனித்து விடப்பட்டார் என்று பேசும் கையாலாகாத திராணியற்ற சுயநலக் கூட்டங்களுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்.
கழகக் கொடியை சின்னம்மா பயன்படுத்தியதைக் கண்டு துரோகக் கூட்டம் கதி கலங்குகிறது. காவல் துறை டிஜிபி வரை சென்று புகார் தருகிறது. இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம், ஏராளம். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் இந்த துரோகிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அரங்கேற்றங்கள் நிகழப் போகிறதே! அப்போது எங்கே முறையிடப் போவார்கள். இனியாவது மாறுங்கள். மாற்றிக் கொள்ளுங்கள்.இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஏசுவோரையும், ஏகடியம் பேசுவோரையும், இறுமாப்போடு பேசுவோரையும் மண்ணைக் கவ்வச் செய்து வெட்கி தலைகுனியச் செய்வோம். தீயசக்திகளுக்கு வழிவிட்டு வளர்த்தவர்களிடம் வாலாட்டும் குள்ளநரிகளின் கொட்டத்தை அடக்குவோம்.
சுயநலம் அறவே மடிந்திட வேண்டும். பொதுநலம் மேலோங்கி பெருகி தொண்டர்களின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற குழப்பம் யாருக்கும் வர வேண்டாம். ஏற்கனவே மணியோசை நாடெங்கும் ஒலிக்கிறது. தீர்க்கமான தெளிவான முடிவோடு கைகோர்த்திட வாஞ்சையோடு புறப்பட்டு வா. வெற்றிகளை ஈட்டுவோம். காலம் கடந்து விடவில்லை.இவ்வாறு அந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.