வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லி, உத்தராகண்ட் மற்றும் உ பி ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாகக் காங்கிரசாரும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று இக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்.விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மத்திய அரசைக் கண்டித்து இன்று பகல் 12 முதல் 3 மணி வரை நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஏற்கனவே விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதையடுத்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் ஆகிய இடங்களில் இருந்து டெல்லி செல்லும் எல்லா வழிகளும் மூடப்பட்டுள்ளன. போராட்டம் நடைபெறும் பகுதிகளில் வெளியில் இண்டர்நெட் சேவைக்குக் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரைக் கூட டெல்லிக்கு நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அனைத்து எல்லைகளிலும் தடுப்பு அரண்கள், முள் வேலிகள், ஆணிப் பலகைகள் மற்றும் கான்கிரீட் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தப் போராட்டத்திற்குக் காங்கிரஸ் முழு ஆதரவு வழங்கும் என்று இக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் காங்கிரசாரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று நடந்த அணிவகுப்பு போராட்டத்தில் டெல்லியில் கடும் வன்முறை ஏற்பட்டதால் டெல்லியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட மாட்டாது என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதேபோல காசிப்பூர் பகுதிக்கு ஏராளமான விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வருவதால் உ பி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போராட்டம் காரணமாக டெல்லி - மீரட் சாலையில் போலீசார் போக்குவரத்திற்குத் தடை விதித்துள்ளனர். இதையடுத்து இந்த தேசிய நெடுஞ்சாலையில் பயிர் செய்ய விவசாயிகள் தீர்மானித்துள்ளனர். இதற்காக நேற்று இரண்டு டிப்பர் லாரிகளில் இந்த சாலை முழுவதும் மண் கொட்டப்பட்டது. இன்று முதல் இந்த சாலையில் பயிர் நடப்போவதாக விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே காசிப்பூர் பகுதியில் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீஸ் வைத்துள்ள ஆணிப் பலகைகளுக்கு முன் விவசாயிகள் பூக்கள் வைத்து வித்தியாசமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.