வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், டெல்லியில் பல்லாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று கூறி, அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு நாடகம் நடத்துவதாக விவசாயச் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது. பலரும் அத்துமீறி டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியை ஏற்றினர். அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குகள் போடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்று(பிப்.6) நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்த மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். டெல்லி, உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் போராட்டம் நடக்காது எ்னறும் அறிவித்திருக்கிறார்கள். அதே சமயம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.டெல்லியின் திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் போலீசார் சாலைகளில் பல அடுக்கு தடுப்புகளை அமைத்துள்ளனர். மேலும், தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனங்கள், கண்ணீர் புகைக்குண்டுகளுடன் போலீசார் தயாராக இருக்கிறார்கள். இதனால் டெல்லியில் சனிக்கிழமை விடுமுறை நாளில் கூட காலையிலேயே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.