நெடுஞ்சாலைத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு : ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

by Balaji, Feb 7, 2021, 18:04 PM IST

தென்காசி கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சம்பந்தபட்ட ஒப்பந்தக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் பணிகளை மேற்க்கொள்ள ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்டத்தை நடைமுறை படுத்திய போதிலும் ஆளும்கட்சியினர் அதிக கமிஷன் பெற்றுக்கொண்டு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணிகளை சில குறிப்பிட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தென்காசி கோட்ட நெடுஞ்சாலை துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நான்கு பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில் தென்காசி மாவட்ட நெடுஞ்சாலை துறையில் கடந்த ஆண்டு மே 27ல் 91 கோடியே 53 லட்சத்திற்கு 13 பணிகளுக்கு பேக்கேஜ் முறையில் டெண்டர் கோரப்பட்டது. இதில் சில பேக்கேஜ் பணிகளுக்கு முறையாக ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகளை செய்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால் பேக்கேஜ் எண் 9,10,17மற்றும் 18 ஆகிய பணிகளுக்கு ஒப்பந்தம் போடாமலும்,பணி உத்தரவு பெறாமலும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேற்படி நான்கு பேக்கேஜ்களுக்குமான மொத்த மதிப்பீடு 28 கோடியே 9 லட்சத்து 55 ஆயிரமாகும். இந்த பணிகளுக்கு டெண்டர் கோரிய ரவிச்சந்திரன் என்ற ஒப்பந்தக்காரர் டெண்டர் விதி முறைகளை பின் பற்றாமல் மேற்கண்ட பணிகளை அவசரம் அவசரமாக முடித்து விட்டார். ரவிச்சந்திரன் டெண்டரில் செய்த தவறை கண்டுபிடித்த அதிகாரிகள் பேக்கேஜ் எண் 10,17 மற்றும் 18க்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டனர்.

ஆனால் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்த பேக்கேஜ் எண் 9 ஐ மட்டும், ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இது சட்டப்படி தவறு. இந்த ஒப்பந்தத்தையும் அதிகாரிகள் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் இந்த முறைகேட்டிற்கு துணை போய் உள்ளார்கள். எனவே ஒப்பந்தகாரர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதை தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருக்கும் போதே நெடுஞ்சாலை துறை, தென்காசி கோட்டத்தில் நான்கு பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நீதிபதி சுந்த்ரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்தகாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

You'r reading நெடுஞ்சாலைத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு : ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை