வாட்ஸ்அப் கிளப்பிய அச்சம்: இந்தியாவில் அதிகம் இன்ஸ்டால் செய்யப்பட்ட மாற்று செயலி எது தெரியுமா?

by SAM ASIR, Feb 7, 2021, 18:06 PM IST

வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய காப்புரிமை கொள்கைகளில் மாற்றம் செய்தது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிலுள்ள 40 கோடி (400 மில்லியன்) பயனர்களுக்கும் மாற்றப்பட்ட காப்புரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி ஏற்றுக்கொள்ளாதோரின் வாட்ஸ்அப் பயனர் கணக்குகள் பிப்ரவரி 8ம் தேதி முதல் அகற்றப்படும் என்று அறிவிக்கை அனுப்பியது. வாட்ஸ்அப் இப்படி அறிவித்ததால் பயனர்கள் வேறு குறுஞ்செய்தி பகிர்வு செயலிகளை நாட ஆரம்பித்தனர். டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை தரவிறக்கம் செய்து தங்கள் ஸ்மார்ட்போன்களில் நிறுவ (இன்ஸ்டால்) ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் உலகம் முழுவதும் விளையாட்டு (கேமிங்) செயலிகளை தவிர்த்து அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டெலிகிராம் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு இதேமாதம் தரவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் 3.8 மடங்கு அதிகமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் டெலிகிராம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 6 கோடியே 30 லட்சம் (63 மில்லியன்)பேர் டெலிகிராமை தங்கள் சாதனங்களில் நிறுவி (இன்ஸ்டால்) உள்ளனர். அதிகப்பட்சமாக இந்தியாவில் 24 சதவீதத்தினரும் அடுத்ததாக இந்தோனேசியாவில் 10 சதவீதத்தினரும் டெலிகிராமை இன்ஸ்டால் செய்துள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரில் கடந்த டிசம்பர் மாதம் கேமிங் செயலிகள் தவிர்த்து தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டெலிகிராம் முதலிடம் பிடித்துள்ளது. ஆப் ஸ்டோரில் அதிகமாக டவுண்லோடு செய்யப்பட்ட 10 செயலிகளில் 4வது இடத்தில் டெலிகிராம் உள்ளது.

கணக்கெடுப்பு செய்த அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த ஜனவரி மாதம் உலகம் முழுவதும் அதிகமாக டவுண்லோடு செய்யப்பட்ட கேமிங் அல்லாத செயலிகளில் டிக்டாக் இரண்டாமிடத்தையும் சிக்னல் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன. ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை பின்னுக்குத் தள்ளி சிக்னல் முன்னேறியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து வாட்ஸ்அப் புதுப்பிக்க காப்புரிமை கொள்கையை நடைமுறைப்படுத்துவதை மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. மேலும் பிப்ரவரி 8ம் தேதி முதல் கணக்கு முடக்கப்படும் என்பதையும் மறுத்துள்ளது.

You'r reading வாட்ஸ்அப் கிளப்பிய அச்சம்: இந்தியாவில் அதிகம் இன்ஸ்டால் செய்யப்பட்ட மாற்று செயலி எது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை