நிர்மலா வழக்கில் ஆதாரங்களை அழிக்க சதி - ராமதாஸ் குற்றச்சாட்டு

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தி கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தொடர்பான வழக்கில் ஆதாரங்களை அழிக்க சதி நடைபெறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்விப்பதற்காக சில மாணவிகளுக்கு வலைவீசப்பட்டது தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பும், அதில் அவர் அளித்த விளக்கங்களும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு மாறாக அதிகரித்துள்ளன.

எந்த வகையிலும் அதிகாரமற்ற விஷயத்தில் ஆளுநர் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. பாலியல் வலை விவகாரத்தில் ஆளுநர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு முற்றிலும் தேவையற்றது.

தமிழகத்தை உலுக்கிய இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளிகள் யார்? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். அதற்காக நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தான் நானும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகிறோம்.

இந்த விவகாரத்தில் பயனாளி ஆளுநர் தான் என்று எந்த தலைவரும் குற்றஞ்சாட்டவில்லை. இத்தகைய சூழலில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட வினாவை எளிதாக கடந்து போயிருக்க முடியும்.

ஆனால், அவ்வாறு செய்யாமல்,எனக்கு 78 வயதாகிவிட்டது. எனக்கு பெயரன், பெயர்த்திகள் மட்டுமின்றி, கொள்ளுப் பெயரன்களும் உள்ளனர்’ என்று பதிலளித்து சுயபச்சாதாபம் தேடும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டது, எதற்காக இந்த நாடகம்? என்ற ஐயத்தை தான் அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இதுகுறித்தெல்லாம் விளக்குவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாத ஆளுநர், மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பெரிய மனிதர்கள் யார்? என்ற சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளிக்க வேண்டிய தேவை என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 4 மாணவிகளை அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள சிலருக்கு பலியாக்க முயன்ற, மன்னிக்கவே முடியாத குற்றம் சார்ந்த விஷயமாகும்.

இது ஒரு தனியார் தன்னாட்சி கல்லூரியின் மாணவிகளை சீரழிக்க அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நடத்திய நாடகம். இதற்கும் பல்கலைக்கழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தனியார் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம், தேர்வு மதிப்பீடு ஆகியவற்றில் மட்டும் தான் பல்கலைக்கழகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

மாறாக, இதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகளில் தலையிட பல்கலைக்கழக துணைவேந்தருக்கோ, வேந்தரான ஆளுநருக்கோ எந்த அதிகாரமும் இல்லை.

ஒருவேளை பல்கலைக்கழக வளாகத்திலேயே இத்தகைய பாலியல் சுரண்டல் நடந்திருந்தால் கூட, அது தொடர்பாக பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள் தான் இக்குற்றத்தை விசாரிக்க முடியும்.

அதுமட்டுமின்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர்பதவிகளில் உள்ள சிலர்தான் அப்பாவி மாணவிகளை வேட்டையாட முயற்சிகள் நடந்துள்ளன.

அதுமட்டுமின்றி, தங்களையே இழக்க முன்வரும் மாணவிகளுக்கு காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று நிர்மலா தேவி ஆடியோ பதிவில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இதன் பின்னணியில் பல்கலைக்கழகம் தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது. அந்த வகையில் பல்கலைக்கழக உயரதிகாரிகள், துணைவேந்தர், வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர் ஆகியோர் தான் பாலியல் சுரண்டல் குற்றச்சாற்றுகளை எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால், காமராசர் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோஹித், துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா ஆகியோர் நீதிபதிகளாக செயல்பட்டு விசாரணைக்கு ஆணையிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது சட்டத்தையும், நீதியையும் கொச்சைப்படுத்தும் செயலாகவே அமையும்.

கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாவிடமிருந்து 3 செல்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பல்வேறு பெரிய மனிதர்களை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும், 60-க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல பெரிய மனிதர்களின் பெயர்களை பட்டியலிட்ட நிர்மலா தேவி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு துணிச்சல் உண்டா? என்று சவால் விடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தான் நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் துறை தலைமை இயக்குநர் ஆணையிட்டுள்ளார். இது குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியே தவிர, அவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல.

இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் துணைவேந்தர் முதல் ஆளுநர் வரை அனைவருமே, இந்த அவலச் செயலை நிர்மலாதேவி மட்டுமே செய்ததாகவும், அதில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என்பது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இது உண்மை அல்ல. காமராசர் பல்கலைக்கழகத்தின் உயர் பதவியில் உள்ள ஒருவர் இந்த விஷயத்தில் மோசமானவர் என்று பல்கலைக்கழக பேராசிரியர்களே குற்றஞ்சாற்றுகின்றனர்.

உண்மை அவ்வாறு இருக்கும்போது நிர்மலா தேவியை பலிகடாவாக்கி விட்டு, அதிகார உச்சியில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்றும் சதி தான் இதுவாகும். இந்த சதித்திட்டத்தில் நிர்மலாதேவியின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். கல்வி கற்பதற்காக வந்த மாணவிகளை காமத்துக்காக பயன்படுத்திக் கொள்ள துடித்த காட்டுமிராண்டிகள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்காமல் தப்பவிடக்கூடாது.

இவ்விஷயத்தில் தம்மீது தவறு இல்லையெனில் அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் தான் ஆளுநர் ஈடுபட வேண்டுமே தவிர, இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

இந்த வழக்கில் பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் எந்த வகையிலும் தலையிடக்கூடாது. மாறாக இந்த வழக்கை மத்திய புலனாய்வு விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!