சசிகலா பற்றி பேசவில்லை.. ஓபிஎஸ், செல்லூர் ராஜு மவுனத்தின் மர்மம் என்ன?

by எஸ். எம். கணபதி, Feb 11, 2021, 14:17 PM IST

சசிகலாவுக்கு எதிராக முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகையில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட தென்மாவட்ட அமைச்சர்கள் மவுனம் சாதிப்பது அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை வந்து சேர்ந்தார். அவருடன் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் வந்தார். சசிகலாவுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் கூடி வரவேற்பு அளித்ததால், அவர் சென்னை திரும்ப 23 மணி நேரமானது.

தற்போது சசிகலா சென்னை தி.நகரில் கிருஷ்ணப்பிரியாவின் இல்லத்தில் தங்கியுள்ளார்.அவரை பார்ப்பதற்கு அதிமுக அமைச்சர்களோ, முக்கிய நிர்வாகிகளோ யாரும் செல்லவில்லை. அவரையும் தினகரனையும் அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஜென்மத்தில் சந்திக்கவே மாட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிராகப் பேசி வந்தாலும், துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்படத் தென் மாவட்ட அமைச்சர்கள் யாருமே சசிகலாவுக்கு எதிராக இது வரை வாய் திறக்கவில்லை. அதிலும் ஓ.பி.எஸ். இளைய மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில், சசிகலா நல்ல உடல்நலமுடன் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று வாழ்த்தி அறிக்கை வெளியிட்டார். மேலும், அவர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்கிறார் என்றும் அவரிடம் பேட்டி எடுங்கள் என்று மீடியாவுக்கு ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அதே போல், ஜெயபிரதீப்பிடம் பேட்டி கண்ட போது, மனிதாபிமான அடிப்படையில் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்று பதிலளித்தார். ஆனாலும் இது வரை சசிகலாவுக்கு எதிராகவோ அவரது வருகை பற்றியோ ஒரு வார்த்தை கூட கூறாமல், ஓ.பி.எஸ். மவுனம் காத்து வருகிறார். அது மட்டுமில்லாமல், விசுவாசத்தில் நிகழ்கால பரதன் என்று தன்னை உண்மையான விசுவாசியாகக் காட்டி, எடப்பாடியை நன்றியில்லாதவராக மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, தினமலரில் முதல் பக்கத்தில் முழுபக்க விளம்பரம் கொடுத்துள்ளார்.

அதே போல், சசிகலா திரும்பி வந்த நாளன்று அதிகாலையில் அமைச்சர் உதயகுமார் குடும்பத்துடன் பழனிக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டார். அவர் சசிகலா நலமுடன் திரும்பி வருவதற்காக நேர்த்திக்கடன் செலுத்தினார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் கூறப்பட்டது.அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கடந்த 2 நாட்களாக நிருபர்கள் பேட்டி கண்ட போது, திமுக தலைவர் ஸ்டாலினையும், கமலையும் கடுமையாக நக்கலடித்து பதில் கொடுத்தார். ஆனால், நிருபர்கள் அடுத்து சசிகலா... என்ற பெயரை உச்சரித்ததுமே, இது அரசு நிகழ்ச்சி.. என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்டு ஓடிவிட்டார். இப்படியாக முக்குலத்தோர் அமைச்சர்கள், சசிகலாவுக்கு எதிராகக் கருத்துச் சொல்லத் தயங்கி மவுனம் காத்து வருகிறார்கள்.

ஏற்கனவே சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை, தெருக்கூத்து என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வர்ணித்திருக்கிறார். ராமதாசை கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்து வன்னியர் ஒதுக்கீடு பற்றி பேசி வருகிறார்கள்.இந்த சூழலில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி என்று கவுண்டர்களும், வன்னியர்களும் கைகோர்த்து முக்குலத்தோர்களை ஓரங்கட்டுவதாக ஒரு பேச்சு கிளப்பி விடப்பட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ் உள்ளிட்டோர் சசிகலா பக்கம் போவார்களா. மாட்டார்களா? அப்படிச் சென்றால் கட்சி உடையுமா? எதையும் சந்திக்கத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கர்ஜிப்பது ஏன்? என்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் அதிமுக தொண்டர்கள் குழம்பிப் போயுள்ளனர். இதையடுத்து, அதிமுகவில் உட்கட்சி குழப்பம் மீண்டும் தலைவிரித்துள்ளது.

You'r reading சசிகலா பற்றி பேசவில்லை.. ஓபிஎஸ், செல்லூர் ராஜு மவுனத்தின் மர்மம் என்ன? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை