மாநில எல்லையில் கனிமவளத்துறை சோதனைச்சாவடி அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

by Balaji, Feb 11, 2021, 18:33 PM IST

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிமவளத் துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றைக் கேரளாவிற்கு விற்பனைக்காகக் கொண்டு செல்ல தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.அவர் தமது மனுவில் கேரளாவில் மணல் எடுத்து விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எம் சாண்டையும் குறிப்பிட்ட அளவிலே உற்பத்தி செய்யலாமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தமிழகத்தில் இருந்து அதிகளவில் எம்.சாண்ட் கேரள மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து பாறைகளை உடைத்து எம்-சாண்ட் தயாரிக்கப்படுகிறது. கேரளாவிற்கு விற்பனைக்காக எம்.சாண்ட் எடுத்துச் செல்ல கடந்த 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் அதனை மீறி நெல்லை மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட சோதனைச்சாவடி வழியாகக் கேரளாவுக்கு எம்.சாண்ட் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலும், பொடி செய்யப்படாத பெரும் கற்கள், ஜல்லிகள் போன்றவற்றை எடுத்துச் சென்று, கேரளாவில் எம்.சாண்டாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி சிதைந்து, சுற்றுச்சூழல் சமநிலையில் மாற்றம் ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே பெரும் கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றைத் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் கேரளாவிற்கு விற்பனைக்காகக் கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எதிர் மனுதாரர் தரப்பில் கனிம வளங்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்குக் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குக் கொண்டு செல்லும் கனிமங்கள் குறிப்பிட்ட அளவைவிடச் சட்டவிரோதமாக அதிக அளவு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய சாலைகளில் கனிம வளத்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும், சட்டவிரோதமாகக் கனிமவளங்கள் திருடப்படுவதைத் தடுக்க கனிமங்களின் அளவை கணக்கிட எடை நிலையங்கள் அமைக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You'r reading மாநில எல்லையில் கனிமவளத்துறை சோதனைச்சாவடி அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை