ஜெயலலிதா பத்திரிகையாளர் சோவிடம் பேசிய பிறகு நான் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என்று சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் 75 நாட்களுக்குப் பிறகு 2016-டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன், கலா, முத்துசெல்வன், டிட்டோ ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களுக்கு ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனையடுத்து ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடமும் விசாரணை நடத்த கமிஷன் முடிவு செய்தது.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்று பெங்களூரு ஜெயிலில் இருப்பதால் நேரடியாக ஆஜராக முடியவில்லை. எனவே சசிகலா இதுதொடர்பாக 55 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை விசாரணை கமிஷனிடம் தாக்கல் செய்துள்ளார்.
அதில், “2011-ம் ஆண்டு மத்தியில் கட்சியில் சில சீரமைப்பு நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொண்ட நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் கொடுத்தனர்.
இந்த நேரத்தில் ஜெயலலிதா இது சம்பந்தமாக பத்திரிகையாளர் சோவிடம் பேசினார். அதன் பிறகு நான் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அப்போது ஜெயலலிதா என்னிடம், சோ சில தகவல்களை கூறியிருப்பதாகவும், அது பற்றி பின்னர் உனக்கு சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
அதன்படி நான் தி.நகரில் உள்ள வீட்டில் போய் தங்கினேன். பின்னர் குறுகிய காலத்தில் மீண்டும் என்னிடத்தில் தொடர்பு கொண்ட ஜெயலலிதா மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்துவிடு என்று கூறினார். அதன்படி 2012 மார்ச் மாதம் நான் போயஸ்கார்டன் திரும்பினேன்.
அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்த உறவினர்கள் யாரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று கடிதம் எழுதி கொடுத்தேன். சோ, ஜெயலலிதாவுக்கு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த கடிதம் எழுதப்பட்டது. நான் ஒருபோதும் அரசியல் மற்றும் நிர்வாக விஷயங்களில் தலையிட்டதில்லை” என்று தெரிவித்துள்ளார்.