மருத்துவரின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய திருடனை விரட்டிப் பிடித்த சிறுவன் சூர்யா சென்னையின் ஹீரோவாகி போனான்.
சென்னை, அண்ணாநகர் சிந்தாமணியில் வசிக்கும் டாக்டர் ஆறுமுகம் (50). ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி பின்னர் விருப்ப ஓய்வு பெற்று மின்ட் பகுதியில் கிளினிக் வைத்துள்ளார். இவரது மனைவி அமுதா (48). இவர் மகப்பேறு மருத்துவர்.
அமுதா தாங்கள் குடியிருக்கும் சிந்தாமணி மூன்றாவது தெருவில் வீட்டின் கீழே கிளினிக் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் நோயாளி போல கிளினிக்கிற்கு வந்துள்ளார். பிறகு அந்த நபர் அமுதாவின் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.
மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சூர்யா என்ற சிறுவன் திருடனை துரத்தியுள்ளான். சிறிது தூரம் சென்ற உடன் திருடனை சூர்யா மடக்கிப்பிடித்து நகைகளை கைப்பற்றினான்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்ப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருடனை கைது செய்தனர். விசாரணையில் திருடன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், சூர்யாவின் தைரியத்தை பாராட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். சூர்யாவின் செயல் மற்றும் தைரியம், மன உறுதிக்கு எனது பாராட்டுக்கள் என கூறினார்.