இரு குழந்தைகள் பலி : கோவை மாவட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போதும் பணியை சுகாதாரத்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

by Balaji, Feb 19, 2021, 17:17 PM IST

கோவை மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த்- விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களது 3 மாத குழந்தை கிஷாந்த்திற்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் அருகிலுள்ள அங்கன்வாடி முகாமில் தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட அன்று மாலையே குழந்தை இறந்துவிட்டது.இதையடுத்து குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில் சளி, நிமோனியா காய்ச்சல் பாதிப்பினால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதனிடையே சவுரி பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதுக் குழந்தை ஒன்றும் தடுப்பூசி போட்டதில் உயிரிழந்து இருக்கிறது. அடுத்தடுத்து இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .குறிப்பிட்ட இரு நாட்களில் மட்டும் சவுரிபாளையம் பகுதிக்குட்பட்ட முகாமில் 12 குழந்தைகளுக்கும், புலியகுளம் முகாமில் 18 குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அந்த 30 குழந்தைகளையும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இறந்த குழந்தைகளுக்குச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் தடுப்பூசியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பெண்டா, ரொட்டா என்றழைக்கப்படும் தடுப்பு ஊசி போடுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.மேலும் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட 7 ஆயிரம் குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு இரண்டு வாரத்தில் ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியில் தீவிரமாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You'r reading இரு குழந்தைகள் பலி : கோவை மாவட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை