பிறக்கும் குழந்தைக்கும் ரூ.62 ஆயிரம் கடன்.. அதிமுக அரசு மீது திமுக குற்றச்சாட்டு..

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் - ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தி, பொருளாதார தேக்க நிலை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திமுக ஆட்சி. ஆனால் 10 ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியில் தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு - வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்புப் புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் பழனிசாமியும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப்பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள்.

2006 - 2011 வரை திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே! தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும் வாங்கப்பட்டுள்ள கடன் 3.55 லட்சம் கோடி! இது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் வரிந்து கட்டிக் கொண்டு உயர்ந்து நிற்கின்றன. தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்து விட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டு விட்டது. கொரோனா பேரிடருக்கு முன்பே - அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் - நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது.2003ம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகும் தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம்? கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா!கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய ஏழை - எளிய, நடுத்தரப் பிரிவு மக்களுக்கு உயிர் வாழ்வதற்கு நேரடி பண உதவியை, பலமுறை மன்றாடிக் கேட்டும், வழங்கிட முன்வரவில்லை.

நிவர் புயல் உள்ளிட்ட பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவில்லை. ஆனால் ஊழல் டெண்டர்களும் - கமிஷன் வசூலும் கடைசி வரை ஓயவில்லை. தற்போது 1000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை எடுத்து, தண்ணீராக தாராளமாக வாரி இறைத்து, விளம்பரங்கள் வழங்குவதிலும் ஊழல் செய்து, தன்னை ஏதோ வாராது வந்த மாமணியைப் போல், தனிப்பட்ட முறையில் ஊதிப் பெருக்கி முன்னிறுத்திக் கொள்ள - தமிழகத்தின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து - அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதலமைச்சர்.

அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்து விட்டது என்று அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க. அரசின் 15-வது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது.பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் மீது வரிகளை ஏற்றி இன்றைய பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கும், விலைவாசி அதிகரிப்புக்கும் காரணமான முதலமைச்சர் பழனிசாமி - கொரோனா நிதியிலும் ஊழல் செய்து - உயிர் காக்கும் நிதியில் கூட வேட்டை ஆடியிருக்கிறார்.அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் - ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது.

பெட்ரோல் - டீசல் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த 87 ஆயிரம் கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை? உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி - ஜி.எஸ்.டி. வருவாய் வரி நிலுவைத் தொகை, நபார்டு நிதி, சர்வதேச நிதி நிறுவனங்கள் அளித்த நிதி அனைத்திலும் அமைச்சர்களும், முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்று வாரிச் சுருட்டி, அப்பாவி மக்களின் வயிற்றில் ஓங்கி அடித்து இருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் - உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் நிதியமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வமும், முதலமைச்சர் பழனிசாமியும் - ஏன் அ.தி.மு.க. ஆட்சியும் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் கீழ் “நிதி நிலை அறிக்கையின் இலக்கு குறித்து” ஆறு மாதத்திற்குள் வைக்க வேண்டிய ஆய்வு அறிக்கையைக் கூட தாக்கல் செய்யாத, தனது அலுவல் பொறுப்பு உணராத ஒரே நிதியமைச்சர் - நாட்டில் நிதி மேலாண்மையில் தோற்றுப் போன மிக மோசமான ஒரு நிதியமைச்சர் என்றால் - அது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்கும்!இப்படியொரு நிதியமைச்சரை இதுவரை தமிழகம் கண்டதில்லை. அந்த அளவிற்கு ஒரு கேடுகெட்ட நிதி நிர்வாகத்தை அளித்துள்ள முதலமைச்சரையும் இதுவரை தமிழகம் பார்த்ததில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடனைச் சுமத்தி விட்டு - தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட ஐந்து மடங்கு கடனை வாங்கி ஊழலில் திளைத்து சுகமான ஆட்சி நடத்தி - வெற்று அறிவிப்புகளைச் செய்தே காலம் கடத்தி, கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும்- கூட்டத் தொடரையும் திமுக புறக்கணிக்கிறது.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :