வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரத்திற்கு செலவு ரூ 64 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் விரைவில் சட்ட மன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்ற தலைப்பில் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் தமிழக அரசின் சார்பில்விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த விளம்பரங்களுக்குத் தடைவிதிக்கக் கோரி திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படி வெளியிடப்படும் விளம்பரங்களுக்கான செலவு தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 'மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த இரண்டு மாதங்களாக விளம்பரங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் மற்றும் ஆளும் கட்சியை முன்னிலைப்படுத்தும் வகையில் வெளியிடப்படும் இது போன்ற விளம்பரங்களுக்குத் தடைவிதிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம் என்றார். தேர்தல் ஆணையத் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராஜகோபால்,அப்போது குறுக்கிட்டு இது தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் கேட்டுப் பெறப் பட்டுள்ளது. அதைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது எனவே , மனுவுக்கு விரிவாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 'ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படவில்லை. ஜிஎஸ்டியுடன் சேர்த்து 64 கோடியே 72 லட்சம் ரூபாய் மட்டும் செலவிடப்பட்டது அரசின் சாதனைகளை விளக்கி வெளியிடப்படும் இந்த விளம்பரங்களை வழங்குவது பிப்ரவரி 18-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வரவில்லை. இது சம்பந்தமாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்' எனக் கோரினார்.இதை ஏற்று வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்குத் ஒத்தி வைத்த நீதிபதிகள், வழக்குகள் தொடர்பாக பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.