சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக காவல் துறையில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லைகள் என்பது சகஜமான ஒன்றாகும். பல பெண் போலீசார் தங்கள் குடும்பச் சூழல் கருதி, புழுக்கத்துடன் தாங்கிக் கொள்வார்கள். சிலர் அதிரடியாகப் புகார் கொடுப்பார்கள். அதனால், அவ்வப்போது பாலியல் புகார்கள், காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தும்.
தற்போது சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. புகார் கொடுத்துள்ளார். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் விசிட் சென்ற போது சிறப்பு டிஜிபியும் சென்றிருக்கிறார். அவர் ஒரு இடத்தில் மாவட்ட பெண் எஸ்.பி.யை பார்த்து நிறுத்தி அவரிடம் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தாராம். பின்னர், தன்னுடன் காரில் வந்து அடுத்த பாயிண்டில் இறங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தி அழைத்துள்ளார். உயர் அதிகாரி என்பதால் தட்ட முடியாமல் அந்த பெண் எஸ்.பியும் காரில் ஏறியிருக்கிறார். அந்த சமயத்தில்தான் டிஜிபி அந்த பெண் எஸ்.பி.யிடம் சில்மிஷம் செய்திருக்கிறார். முதலில் அவரது கையை தட்டி விட்ட எஸ்.பி., ஒரு கட்டத்தில் வண்டி நின்ற போது விருட்டென்று இறங்கிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்பின்னர், அந்த பெண் எஸ்.பி. இது குறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்திருக்கிறார். புகார் கொடுத்தவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால், ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்ட விசாகா கமிட்டி தான் புகாரை விசாரிக்க வேண்டும். ஆனால், புகாரை வாபஸ் பெற வைப்பதற்கான முயற்சி தீவிரமாக நடக்கிறது என்று காவல்துறை வட்டாரங்களில் நெருக்கமாக உள்ள சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருக்கிறார். ஐ.ஜி. ஜெயராம் தற்போது பெண் எஸ்.பி.யை மிரட்டி, புகாரை வாபஸ் பெற வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஏற்கனவே ஐ.ஜி. முருகன் என்ற உயர் அதிகாரி மீது இன்னொரு பெண் அதிகாரி, பாலியல் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் இது வரை முருகன் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, முருகனுக்கு நல்ல பதவி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஒரு பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதைக் கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?இவ்வாறு கனிமொழி கேட்டுள்ளார்.