அகமதாபாத் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் சிப்லியும், சேக் கிராலேயும் களமிறங்கியுள்ளனர்.இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள புதிய மொட்டேரா சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் தொடங்கி உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 1,10,000 பேர் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. பகல், இரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் சிப்லியும், சேக் கிராலேயும் களம் இறங்கியுள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இன்னொரு வேகப்பந்து வீச்சாளரான ஸ்டுவர்ட் பிராடும் உள்ளார்.
இந்திய அணியில் 2வது டெஸ்டில் விளையாடிய குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் இஷாந்த் சர்மா மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் அஷ்வின் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.