தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் உதகை சட்டமன்ற தொகுதி மஞ்சூர் பகுதியில் பாஜகவினர், தமிழக அரசின் தொழில் துறையில் இருந்து விண்ணப்பங்களை பெற்று தையல் மெஷின் வாங்கி தருவதாக டோக்கன் வழங்கினர். இது திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இன்னும் எந்த கட்சி போட்டியிடுவது யார் வேட்பாளர்கள் என்று அறிவிக்காத நிலையில் பாஜகவினர் தற்போது முதலே தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதகை அருகே உள்ள மஞ்சூர் மற்றும் கரிய மலை பகுதிகளில் பாஜக மாவட்ட பிரதிநிதி மயில்வாகனம் தலைமையில் சிலர் தொழில்துறை விண்ணப்ப படிவங்களை கொண்டு சென்று தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் இலவசமாக தையல் மெஷின் வழங்கப்படும் என்று கூறி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற்று வந்தனர். இதை அறிந்த அப்பகுதி திமுகவினர் அங்கு வந்து அதை தடுத்து நிறுத்தி பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு வந்தனர்.
பாஜகவினர் வைத்திருந்த டோக்கன்கள் மற்றும் 70 விண்ணப்ப படிவங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாஜகவினர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மஞ்சூர் காவல் நிலையத்தில்தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது அரசு நல திட்டங்களை வழங்க கூடாது. நீலகிரி மாவட்டத்தில் பாஜகவினர் தொழில் துறை மூலம் வழங்கபடும் இலவச தையல் மெஷின் வழங்குவதாக கூறி விண்ணப்பம் வழங்கியது சர்ச்சையை எற்படுத்தி உள்ளது.