பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் உயர் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. விசாரணை நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வண்ணமும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி பதவியை தவறாக பயன்படுத்தாதவண்ணமும் பணியிடை நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சர் சுற்றுப்பயணத்தின்போது சிறப்பு டிஜிபி பதவியில் இருந்த அதிகாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது புகார் அளிக்கச் சென்றபோது இன்னொரு ஐபிஎஸ் அதிகாரி தன்னை தடுத்ததாகவும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் செய்திருந்தார்.
உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்த அப்போதைய செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்போதைய சிறப்பு டிஜிபி ஏன் இன்னும் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அனைவருக்கும் ஒரே அளவுகோல் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், நீதிமன்றத்தின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்கவேண்டும் என்றும் அப்போது நீதிபதி கேட்டுக்கொண்டார். நீதிமன்றத்தின் உணர்வுகளை அரசு தீவிரமாக கருத்தில் கொள்ளும் என்று மாநில அரசின் வழக்கறிஞர் கூறியதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி மார்ச் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.