கோவிட்-19 கிருமியின் உருமாற்றம் அடைந்த 3 புதிய வடிவங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார துறை இணையமைச்சர் அஸ்வினி சௌபே ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ளார்.
2021 மார்ச் 4ம் தேதி கணக்குப்படி உருமாற்றம் அடைந்த கோவிட் கிருமிகள் இந்தியாவில் உள்ளனவா என்பதை கண்டுபிடிக்க 242 மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகவும் அதில் ஐரோப்பா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கிருமிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
SARS-CoV-2 என்ற வகையைச் சேர்ந்த இக்கிருமிகளின் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் உருமாற்றம் அடைந்த வடிவங்கள், ஏற்கனவே நோய்தொற்று ஏற்பட்டவர்களை மறுபடியும் தாக்கும் இயல்பு கொண்டவை என்றும் கூறப்படுகிறது. இதுபோன்று வெளிநாடுகளில் உருமாற்றம் அடைந்த கிருமிகள் இந்தியாவில் பரவுவதை தடுக்கும்வண்ணம் சர்வதேச பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் இந்தியா திருத்தம் செய்துள்ளது. அதன்படி சர்வதேச பயணிகளுக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் தொற்று நீங்கும் வரைக்கும் சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SARS-CoV-2 கிருமியின் உருமாற்ற வடிவத்தால் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.