இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, டி.வி தொகுப்பாளினி சஞ்சஜா கணேசன் இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. 27 வயதாகும் பும்ரா இதுவரைக்கும் இந்தியாவுக்காக 19 டெஸ்ட்டுகள், 67 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற இவரது சாதனையை கடந்த வெள்ளிக்கிழமை சஹால் கடந்தார்.
2019 உலக கோப்பை கிரிக்கெட், ஐபிஎல் மற்றும் இந்திய அணி பங்கேற்கும் பல போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் சஞ்சஜனா கணேசன் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த பும்ராவுக்கு, அவரது திருமணத்தை முன்னிட்டு தனிப்பட்ட காரணம் என்ற அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் விடுமுறை அளித்துள்ளது.
தன்னுடைய திருமண புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பும்ரா, கூடவே "காதல் உங்களை பெறுமதியுள்ளவராக கருதினால், உங்களை வழிநடத்தும். காதலால் வழிநடத்தப்பட்டு நாங்கள் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளோம். இன்றைய தினம் எங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று. எங்கள் திருமண செய்தியையும், சந்தோஷத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள இயன்றதை ஆசீர்வாதமாக கருதுகிறோம்" என்றும் கூறியுள்ளார்.