மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது பிரசாரம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல நடிகரான கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கோவையில் தங்கியிருக்கும் கமல்ஹாசன் அங்கு காலையில் நடைபயிற்சி செல்கிறார். அப்போது பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். கமல்ஹாசனை பார்க்கும் மக்கள் அவரோடு கைகுலுக்குகின்றனர்; செல்ஃபி எடுக்கின்றனர்.
அப்படி நெருங்கியபோது ரசிகர் ஒருவர் கமல்ஹாசனின் வலக்காலில் மிதித்துள்ளார். இதனால் அவரது கால் பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரிலுள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து அவரது காலை பரிசோதித்தனர். கடந்த ஜனவரி மாதம் வலக்காலில் ஏற்பட்ட நோய்தொற்று காரணமாக கமல்ஹாசனுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இப்போது அதே காலில் மீண்டும் காயம்பட்டுள்ள நிலையில் அவர் ஓய்வெடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே, அவரது பரப்புரையில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.