திமுக கோட்டையில் ஓட்டையா?.. ஆயிரம் விளக்கில் பாஜக வெற்றி எப்படி?!

by Sasitharan, Mar 28, 2021, 20:00 PM IST

அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கில் களமிறங்கியுள்ள நடிகை குஷ்புவிற்கு ஆதரவுகளும், வெற்றி வாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

அமமுக சார்பில் போட்டியிடும் வைத்தியநாதனும், மநீம சார்பில் போட்டியிடும் சரீப், நாதக சார்பில் போட்டியிடும் ஷெரீன் ஆகியோர் எல்லாம் குஷ்புவிற்கு போட்டி என கூற முடியாது. திமுக வேட்பாளர் எழிலன் மட்டுமே அவருக்கான நேரடி போட்டியாக கருதப்படுகிறது. அதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக - பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

பாதி தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய சென்னையின் பிரதான பகுதிகளை உள்ளடக்கி, பல முக்கிய பிரமுகர்கள் வசிக்க கூடிய பகுதி என்பதால் ஆயிரம் விளக்கு தொகுதி ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. தற்போது முதன் முறையாக தேர்தலில் களம் காணும் குஷ்பு இங்கு போட்டியிடுவதால் ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள், அரசியல் விமர்சகர்கள் ஆகியோரது பார்வை ஆயிரம் விளக்கில் பதிய ஆரம்பித்துள்ளது. அதிமுக இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. இருந்தாலும்
மு.க.ஸ்டாலின் 3 முறை வெற்றி பெற்றார் என்பதற்காக ஆயிரம் விளக்கை திமுக கோட்டை எனக்கூறி பொய்யான ஒரு பிம்பத்தை கட்டமைத்து வருகின்றனர்.

2016 தேர்தல் முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட
கு.க.செல்வம் - 61,746 வாக்குகளை பெற்றார். அதற்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர்
வளர்மதிக்கு -52,897 வாக்குகள் விழுந்திருந்தன. இரண்டிற்கும் பெரிதாக வித்தியாசம் கிடையாது. மக்கள்நல கூட்டணி -7,805 வாக்குகளும், பாஜக -8,516,
பாமக - 3,968 வாக்குகளும் பெற்றன.

வர உள்ள சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதனால் கடந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமகவிற்கு வாக்களித்தவர்கள் நிச்சயம் இந்த முறை குஷ்புவிற்கு வாக்களிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதன்படி கணக்கு போட்டாலே குஷ்புவிற்கு கணிசமாக 65 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது கடந்த தேர்தலில் திமுக வாங்கிய ஓட்டுக்களை விட 4 முதல் 5 ஆயிரம் வரையிலான ஓட்டுக்கள் கூடுதலாகவே கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் கடந்த முறை திமுக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட கு.க.செல்வமும் குஷ்புவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது கூடுதல் பலம். குஷ்பு பல மேடையில் கூறியது போல 'என்னுடைய BackBone சுந்தர்தான் சுந்தர் மட்டும்தான்' போல அவரும் தீவிரமாக மனைவிக்கு தன் சார்பிலும் சினிமாக நட்சத்திரங்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்.


தொலைக்காட்சிகள் அத்தொகுதியில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பு அடிப்படையில் குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் குஷ்பு வெற்றி பெறுவார் என்று கூறுகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆ.ராஜா முதல்வர் பழனிசாமியை மற்றும் பெண்களை இழிவாக பேசிய பேச்சு விவாத பொருளாக ஆனது. ஓட்டுமொத்த தமிழகமே திமுகவை கடுமையாக விமர்சிக்க காரணமாக அமைந்த சம்பவம் அரங்கேறியது, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரிக்கும் போது தான். பெண்களின் ஆதரவு மொத்தமும் தனக்கு தான், குறிப்பாக இஸ்லாமிய சகோதரிகள் எனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள் என கொக்கரித்த எழிலன், ஆ.ராசாவின் ஆபாச பேச்சை சிரித்து ரசித்தது அப்பகுதி பெண்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூகநீதி, பெண்ணியம் பேசும் திராவிட காட்சியின் முக்கிய பேச்சாளர்களான ஆ.ராசா, எழிலன் போன்றோரே பெண்களை இவ்வளவு கேலி கூத்தாக பேசினால் சாதாரண தொண்டன் மனதில் எவ்வளவு வன்மம் இருக்கும் என இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

ஏற்கனவே ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவிற்கு பெண்களின் ஆதாரவு பெருகி வந்தது. அதை பல மடங்கு அதிகரிக்கும் விதமாக ஆ.ராசாவின் பேச்சு அமைந்துவிட்டது. பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் ஆ.ராசா, லியோனி போன்றோர் இருக்கும் கட்சிக்கு வாக்களிப்பதற்கு பதிலாக, பெண்களுக்கு மதிப்பும், வாய்ப்பும் அளிக்கும் பாஜகவிற்கு வாக்களிக்கலாம் என்ற முடிவிற்கு அப்பகுதி மக்கள் வந்துவிட்டனர்.

பெண்கள், மாணவர்களை கவரும் விதமாக சமீபத்தில் குஷ்பு வெளியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதிக்கான வாக்குறுதிகளும் ஆதரவை அதிகரிக்க செய்துள்ளது. குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற அறிவிப்பு சமூகவலைத்தளங்களிலும், மக்கள் மத்தியிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. பிரபல ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில பாஜக வெற்றி பெற கூடிய இடங்களாக மொத்த மூன்று தொகுதிகள் சொல்லப்படுகிறது. அதில் ஆயிரம் விளக்கும் ஒன்று.

வாய்ப்பை பெறுவது முக்கியமல்ல, வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் குஷ்பு சரியாக சென்று கொண்டிருக்கிறார். எனவே குஷ்பு இந்த தொகுதியில் 5ஆயிரம் முதல் 8ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது நிதர்சனமான உண்மை.

You'r reading திமுக கோட்டையில் ஓட்டையா?.. ஆயிரம் விளக்கில் பாஜக வெற்றி எப்படி?! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை