அரக்கோணம் இரட்டைக் கொலை – தொடரும் போராட்டம்

by Simon, Apr 9, 2021, 09:10 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்சுனன், சூர்யா உள்ளிட்டோர் கடந்த 7 ஆம் தேதி மாலை குருவராஜப்பேட்டையில் கடை ஒன்றில் அமர்ந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த சில நபர்கள் தகராறு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சோகனூர் கிராம இளைஞர்கள் கத்தி, இரும்பு கம்பி, பாறாங்கல்லால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை அறிந்த சோகனூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சைபலனின்றி அர்சுனன், சூர்யா உயிரிழந்தனர். மேலும், இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணமாகி பத்து நாட்களேயான சூர்யா அடித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட இளைஞர்களுக்கு நீதி வேண்டி உறவினர் மற்றும் அச்சமூகத்தினர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மதன், அஜித், புலி, குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- அதிமுகவின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக-வை ஆதரிக்கும் அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பழனியின் மகன்களும், அதிமுக, பாமக சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் படுகொலைகளைச் சம்பவத்தைக் கண்டித்து, நாளை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

You'r reading அரக்கோணம் இரட்டைக் கொலை – தொடரும் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை