கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டித்தது. பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு பிறப்பித்தது. அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்து வருவதற்கு இ-பாஸ் கட்டாயம். பஸ் பயணங்களில் நின்றுகொண்டு செல்ல அனுமதி இல்லை. மத வழிபாட்டு தலங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். திரையரங்குகள், ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதி. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பு என கொரோனா தடுப்பு புதியவிதிமுறைகள் அமலுக்கு வந்தன.
புதிய விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் புதிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் திரிகின்றனர்.
இதனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.