உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் புனித நீராட குவிந்த லட்சக் கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் இந்த ஆண்டுக்கான கும்பமேளா நிகழ்ச்சியில் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பாவ்ரி பகுதியில் கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
கடந்த மாதம் மார்ச் 11 ஆம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு முதல் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று 2 வது புனித நீராடல் துவங்கியது.
அதன்படி, இன்று காலை 7 மணியில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஒரே இடத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கும்பமேளா நிகழ்ச்சிக்கான ஐ.ஜி. சஞ்சய் கஞ்சியாலிடம் கேட்ட போது, “கொரோனா விதிகளை முறையாக பின்பற்றும்படி மக்களிடம் நாங்கள் தொடர்ந்து கேட்டு கொள்கிறோம். ஆனால், மக்கள் திரளாக வந்து குவிகின்றனர். அதனால் இன்று அவர்கள் மீது அபராதம் விதிப்பது என்பது சாத்தியமில்லை. சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதும் கடினம். நாங்கள் கட்டாயப்படுத்தி அதனை செய்ய முற்பட்டால் கூட்ட நெரிசல் ஏற்பட கூடிய சூழல் உருவாகும். அதனால், எங்களால் சமூக இடைவெளி உத்தரவை அவர்களிடம் கட்டாயப்படுத்த முடியவில்லை” என ஐ.ஜி. சஞ்சய் கஞ்சியால் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் 2 வது புனித நீராடலைத் தொடர்ந்து வரும் 14 ஆம் தேதி பக்தர்கள் அதிகம் கூடும் 3 வது புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.