இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாமின் முதல் நாளான நேற்று மட்டும் 27 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் முகாம்களை நடத்த வலியுறுத்தினார். இந்தத் தடுப்பூசி திருவிழாவில் 45 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. நேற்று மட்டும் நாட்டில் 6.38 லட்சம் தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி மையங்கள் இரண்டு மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி திருவிழாவில் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிகப்படியான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியா முழுவதும் புதிதாக 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 2 வது நாளாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது