தமிழகத்தில் தற்போது கொரோனாவில் இரண்டாவது அலை பரவி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் இன்று 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 26 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 1,977 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் தற்போது 37,673 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,952 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 76 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது.
6000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு நாட்கள் முன்பு அறிவித்த கட்டுப்பாடுகளில் சிலவற்றை திருத்தி மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் மெரினா போன்ற கடற்கரைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செல்ல இனி தடை விதிக்கப்படுகிறது. இது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மூன்று மாவட்ட கடற்கரைகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபடலாம் என்றும் கூறப்பட்டுளள்து. முன்பு இது இரவு 8 மணி வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த விதித்த தடை தொடர்கிறது. இதேபோல், புதிதாக வெளியாகும் திரைப்படங்களை தியேட்டர்களில் கூடுதலாக ஒரு காட்சி திரையிடலாம் என்றும், புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு மட்டும் இந்த கூடுதல் காட்சி திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், இந்த திருத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.