கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.
இந்தியாவில் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுபடுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி 600 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், முன்களப்பணி யாளர்களைத் தொடர்ந்து 60 வயது கடந்தவர்களுக்கும், தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மாநிலம் முழுவதும் தற்போது 4ஆயிரத்து 328 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதில், 3ஆயிரத்து 797 மையங்களில் கோவிட் ஷீல்டு தடுப்பூசியும், 531 மையங்களில் கோவேக்சினும் போடப்பட்டு வருகிறது. தற்போது வரை 6 லட்சத்து 83ஆயிரத்து 419 சுகாதாரப்பணியாளர்கள், 6 லட்சத்து 67ஆயிரத்து 296 முன் களப்பணியாளர்கள், ((60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 13 லட்சத்து 27ஆயிரத்து 811 பேர், 45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 12லட்சத்து 65ஆயிரத்து 479 பேர்)) என மொத்தம் 39 லட்சத்து 44ஆயிரத்து 5 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
தினசரி 1லட்சத்து 25ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் நிலையில் அதனை 2 லட்சமாக அதிகரிக்கவும், 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி எடுத்துகொள்ளும் நோக்கிலும், இன்று முதல் 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகின்றது.