வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி 234 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவானது. வாக்குப்பதிவு முடிந்து உடன் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்திய வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது சர்ச்சையானது. இதில், தேர்தல் பணியாளர்களான மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்றும் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்ட்ட இயந்திரம் பழுதான விவிபேட் இயந்திரங்கள், இவை பயன்படுத்தப்படவில்லை என்றனர்.
இதனிடையே இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. தேர்தல் அதிகாரி பிரகாஷ் சம்மந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பினார். மேலும் இந்த விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதுதொடர்பான விசாரணை அறிக்கையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்தநிலையில், சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில், மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.