தமிழகத்தை நெருங்கும் மற்றொரு புயல்... அதிகமழை பெய்ய வாய்ப்பு!

மீனவர்களை காப்பாற்ற கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்

by Suresh, Dec 3, 2017, 05:22 AM IST

கன்னியாகுமரி அருகே வங்க கடலில் ஒகி புயல் கடந்து சென்ற நிலையில் இப்போது சென்னை நோக்கி மற்றொரு புயல் வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து, சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் செய்தியாளர்களிட்ம் கூறியதாவது:-

வானிலை ஆய்வுமையம் தந்துள்ள தகவலில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னை உள்பட வட மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி உள்ளனர்.
இது புயலாக மாறுமா? இல்லையா? என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் வட தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என்று கூறி உள்ளனர்.
அதிகமாக மழை பெய்யும்போது அணைகள் பெரிய ஏரிகள் நிரம்பி குளங்களுக்கு கூடுதலாக தண்ணீர் வரும். எனவே ஏரி, குளங்களின் கரைகளை கண்காணித்து பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பல வீனமான நீர் நிலைகளை மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த முறை மதுராந்தகம் ஏரி நிரம்பியபோது தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினோம். இம்முறை ஏரி நிரம்பினால் அதேபோல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நீர்நிலைகளையும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் கண்காணித்து வருகின்றனர்.

ஏரி, குளங்கள் நிரம்பி தண்ணீர் திறக்கும் சூழ்நிலை உருவானால் கரையோர மக்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை செய்து உஷார் படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். ஒகி புயலில் சிக்கி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 300, 400 பேர் கடலில் தத்தளிப்பதாக கூறுகின்றனர். ஆனால் சரியான விவரம் கிடைக்கவில்லை. எங்கள் கணக்குப்படி 100 பேர் காணாமல் போய் இருக்கலாம் என கருதுகிறோம். இவர்கள் லட்சத்தீவு பகுதியில் தவிப்பதாக தெரிகிறது. இந்த மீனவர்களை காப்பாற்ற கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் சாய்ந்து கிடக்கும் 4 ஆயிரம் மின் கம்பங்களை சரிப்படுத்த வெளி மாவட்டங்களில் இருந்து 2500 மின் ஊழியர்கள் வந்துள்ளனர். சிலதினங்களில், மின் வினியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கிவிட அமைச்சர்கள் பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் அங்கேயே முகாமிட்டுள்ளனர். மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உதவி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விட்டன. பிரதான சாலைகளில் விழுந்து கிடந்த 300 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. உள்புற சாலைகளில் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

மழை சேத விவரங்கள் தண்ணீர் வடிந்ததும் முழுமையாக கணக்கிடப்படும். வீடு இழந்தவர்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

You'r reading தமிழகத்தை நெருங்கும் மற்றொரு புயல்... அதிகமழை பெய்ய வாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை