தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வீட்டிற்குள்ளையே மக்கள் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 18-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 5 நாட்களாக இரவு 10 மணியளவில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பெரிய ஜவுளிக்கடைகள் மற்றும் சிறிய கடைகள் ஆகியவற்றில் ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் துணி எடுப்பதற்கு அலை மோதுவார்கள். இதனால் ஜவுளிக் கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன. இதேபோன்று செல்போன் கடைகள், ஹார்டுவேர்ஸ் மற்றும் பெயிண்டு கடைகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டு இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், மூலக்கடை, மாதவரம், செங்குன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரமாக பலர் கடைகளை போட்டு வியாபாரம் செய்வது வழக்கம்.
இந்த கடைகளில் பூக்கள், காய்கறிகள், மீன், கருவாடு உள்ளிட்ட உணவு வகைகளும் அதிகளவில் விற்பனையாகும். நேற்று அது போன்று எந்த கடைகளையும் காண முடியவில்லை. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு கூடுவார்கள். தியேட்டர்களுடன் கூடிய மால்களில் திருவிழா போன்று கூட்டம் காணப்படும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு பயந்து மக்கள் வெளியில் வரவில்லை.
திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால் மாநிலம் முழுவதும் திருமண நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெற்றன. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கை மீறி வெளியில் வந்த கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார் அதில் வந்தவர்களை எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்தனர். அப்போது உரிய காரணங்களை தெரிவிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.