கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத தம்பதியினர் சமீபத்தில் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்துக்கொள்ள சென்றுள்ளனர். அப்போது, வெயில் கொடுமையால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சந்திக்கும் சிரமங்களை பார்த்துள்ளனர் இருவரும். இதையடுத்து, வீட்டிற்கு சென்றவர்கள், உடனே தங்களது தங்க நகைகளை 2.20 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்த தம்பதியினர், அந்த பணத்தை வைத்து 100 மின் விசிறிகளை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து வந்துள்ளனர்.
பின்னர் இஎஸ்ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரனை சந்தித்த தம்பதியினர் தங்களின் விவரங்களை வெளியிடவேண்டாம் எனக் கூறியதுடன் 100 மின்விசிறிகளையும் டீனிடம் வழங்கி மருத்துவமனையில் பொறுத்த சொல்லியிருக்கின்றனர். தம்பதியினர் நகைகளை அடமானம் வைத்து மின்விசிறிகளை வாங்கியிருப்பதை அறிந்த டீன் ரவீந்திரன், மருத்துவமனையின் தேவைக்கேற்ப சில மின்விசிறிகளை மட்டும் கொடுத்துவிட்டு மீதம் இருந்த மின்விசிறிகளை திரும்ப கொடுத்து நகைகளை மீட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆனால் வாங்கி வந்த மின்விசிறிகளை திரும்ப பெற விரும்பாத அந்த தம்பதியினர், அது நோயாளிகளுக்கு பயன்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதன்பின் கோவை மாவட்ட ஆட்சியரும் இதுதொடர்பாக தம்பதியிடம் பேச, அப்போதும் மறுத்துள்ளனர். இறுதியில், அவர்களது அன்புக்கு பணிந்து தம்பதியிடமிருந்து மின்விசிறிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. கோவை தம்பதியின் செயல் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.