”என்னுடைய போன் நம்பரை பாஜகவினர் பரப்பி விட்டுள்ளதால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு, கொலைமிரட்டல் கால்கள் வருகின்றன” என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த் கோடிகளில் புரளும் மற்ற நடிகர்களைப்போல வெறுமனே நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். தனது கண்டனங்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். வெறுமனே ட்வீட் போட்டுவிட்டு நகர்ந்துவிடும் அரசியல்வாதிகளை போல அல்லாமல், களத்தில் இறங்கியும் தனது ஆதரவை தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் இலவச தடுப்பூசி போடப்படும் என்ற ட்வீட்டை பகிர்ந்து ”பாஜக எப்போது ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்படுகிறதோ அப்போதுதான் இந்த நாடும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோல், உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் “ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்” என ட்வீட் செய்திருந்தார்.
இதனால், கோபமுற்ற பாஜகவினர் சித்தார்த்தின் போன் நம்பரை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளனர். இதனை, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சித்தார்த், “என்னுடைய போன் நம்பரை பஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர்.
எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன. அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார். பாஜகவினரின் இந்த கீழ்தரமான செயல்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.