ஜெயலலிதா வாரிசு என அம்ருதா தொடர்ந்த வழக்கில் உயிரியல் மாதிரி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் ஜெயலலிதாவின் மகள் என்றும், இதை நிரூபிக்க எனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்தே அம்ருதா பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சைலஜா என்ற சகோதரியே ஜெயலலிதாவிற்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால், அம்ருதா வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெயலலிதாவின் உயிரி மாதிரிகள் இருக்கிறதா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை. எனவே இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு புதனன்று (ஏப்ரல் 25) நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அதிமுக பிரமுகரான ஜோசப் என்பவர் உறவினர்களான தீபக், தீபா மற்றும் அம்ருதா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்காகவே இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது, ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என அப்பல்லோ தரப்பில் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரியல் மாதிரிகள் தொடர்பாக அப்பல்லோ இன்று வியாழனன்று (ஏப். 26) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.