1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து!

by Madhavan, May 3, 2021, 11:42 AM IST

வறுமை, நேர்மை, எளிமை என வாழ்ந்து வருகிறார் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர். இன்று அவர் எம்.எல்.ஏ. ஆம், திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை 30,058 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்துதான் அவர்.

அரசியல்வாதிகள் என்றாலே பணத்தில் புரளுபவர்கள்தான் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் பதியவைக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இங்கிருப்பவர்கள் பணத்தில் திளைக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கோடீஸ்வரர்களாத்தான் இருக்கிறார்கள். அவர்களில் எளிமையாக இருப்பவர்களை தேடிக்கண்டுபிடிப்பது கஷ்டம். அப்படி ஒருவர்தான் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் க.மாரிமுத்து.

திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காடுவாகுடி கிராமத்தில் உள்ளது அந்த வீடு. திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் க.மாரிமுத்துவின் வீடு பெரிய வசதிகளற்ற கூரை வீடு.

image

சிமெண்ட் பூச்சு காணாத எளிமையான வீடு. இதுதான் நடப்பு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவரின் இல்லம் என்பது காண்போரை ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைக்கும். 49 வயதாகும் மாரிமுத்து, 25 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கி வருபவர். சாதாரண, அடித்தட்டு மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்ததே இவரை வேட்பாளராகவும் அறிவிக்க வைத்தது.

மாரிமுத்துவின் மனைவி ஜெயசுதா, தனது கணவர் மக்களுக்காக போராடும் நிலையில், தானும், மாமியாருமாக கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருதாக கூறினார். மாரிமுத்து தனது வேட்பு மனுவில், 3 ஆயிரம் ரூபாய் பணம் கையிருப்பு, வங்கிக்கணக்கில் 58 ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் கையில் ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் 3 பவுன் நகைகளை சொத்து மதிப்பாக குறிப்பிட்டு இருந்தது அனைவரிடமும் பெரும் கவனத்தை பெற்றது. பூர்வீக வீடும் மனைவி பெயரிலான சொத்தாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தோல்வியடைந்த சுரேஷ்குமார் தனது சொத்து மதிப்பு 20 கோடிக்கு மேல் என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார். எளிமையின் அடையாளமான மாரிமுத்து மக்கள் பிரச்னைகளுக்கு சட்டமன்றத்தில் குரல் எழுப்ப இருக்கிறார்.

You'r reading 1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை