என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் இது குறித்து நான் விளக்கம் கொடுத்திருந்தேன் என்று தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வரும் முன்பாக தூர்தர்ஷன் செய்திகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த செய்தி வாசிப்பாளர்களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் பாத்திமா பாபு. அப்பேர்பட்ட பாத்திமாவை திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளமையில் கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்தி இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள பாத்திமா பாபு, “என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் இது குறித்து நான் அப்போதைய குமுதம் இதழின் பத்திரிகையாளரான பால்யூவிற்கு விளக்கம் கொடுத்திருந்தேன்.
ஆனால், ஏனோ நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில் ஒருமுறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த இடைவெளியில் என்னைச் செய்தி வாசிப்பாளராகக் காண முடியாத காரணத்தால் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள்.
இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது, பரப்பப்பட்டது என்று எனக்குப் புரியவில்லை. நான் அப்போதும், இப்போதும் என்னை இவ்விஷயமாக விசாரிக்கும் எனது நண்பர்களுக்கு மேலே சொன்ன காரணத்தைத் தான் விளக்கமாக அளித்து வருகிறேன். அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பாடு. நான் விளக்கம் அளித்த பிறகும் சிலர் அதே வதந்தியை உண்மை போலக் கூறி அவரது நற்பெயருக்குக் களங்க விளைவிப்பார்களானால் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.