18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்கக் கோரி நீதிபதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேவராஜன் என்பவரை நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை அன்று ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை அறிவிப்பதற்காக பிற்பகல் 3.30 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தயாரானது.
அப்போது, சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்கக் கோரி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள், அந்த வழக்கை விசாரித்தது வேறு அமர்வு, இது வேறு அமர்வு. இந்த அமர்வு எப்படி தீர்ப்பு வழங்க முடியும். நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினர். மேலும் தீர்ப்பு எழுதும் பணி முடிந்தவுடன் வழங்கப்படும். எதை முதலில் வழங்க வேண்டும் என்று யாரும் நீதிமன்றத்திற்கு அறிவுரை வழங்க முடியாது என்றும் கூறினர்.
இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்ததால், பாதுகாப்பு வீரர்களை அழைத்து நீதிமன்ற அறையை வீட்டு வெளியேற்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதனால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.