2018 ஐபிஎல் போட்டிகள் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்கொண்டு இருக்கிறது. டாஸ் ஜெயித்தால் போட்டியில் ஜெயித்துவிடலாம் என்ற மனக்கணக்குகளை சுக்குநூறாக உடைத்து விட்டார்கள் இந்த வருட இளம் வீரர்கள்.
போட்டியின் முடிவுக்காக கடைசி பந்து வரை பார்க்க வேண்டிய கால சூழல் நிலவுவதால், ரசிகர்களின் தூக்கத்தை இரவு பனிரெண்டுக்கு நிர்ணயம் செய்து விட்டது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்.
சென்னை அணி மீண்டும் திரும்பி வந்திருக்கும் உற்சாகத்தை விட, பழைய ஃபார்மை விட பலம் வாய்ந்த அணியாக திரும்பி வந்திருப்பதால்.. சென்னை ரசிகர்கள் டபுள் சந்தோஷத்துடன் இந்த ஐபிஎல்லை கொண்டாடி வருகிறார்கள்.
அதுபோல் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற தமிழர்கள் தலைமை வகிக்கும் பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கும் பலர் ஆதரவளித்து வருகிறார்கள். ஆக, தமிழனுக்கு மொத்தம் மூன்று அணி என சொல்லி முடிப்பதற்குள்... நாலாவதா நாங்க இருக்கோம் என எட்டிப்பார்க்கிறது சன் ரைசர்ஸ் ஜதராபாத்.
"மற்ற அணிகளுக்கு கேப்டன் தான்டா தமிழன்... எங்கள் அணிக்கு உரிமையாளரே தமிழன்தான்டா" என... கேட்ச் பிடித்து, மீசை முறுக்கி, தொடையில் தட்டி... நான்காவதாக தமிழரின் பெருமை பாடி வந்து நிற்கிறது ஐதராபாத் அணி.
ஆக... தமிழர் என்கிற அடையாளத்தோடு இந்த அணிக்கு ஆதரவு கிடைக்கிறதோ இல்லையோ... திமுக என்ற முறையில் பலரது ஆதரவு நிச்சயம் ஐதராபாத் அணிக்கு கிடைக்கும். இங்கு அரசியல் பேச வேண்டாம் என்கிற இடம் பொருள் அறிந்து விளையாட்டுக்குள் செல்வோம்...
கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு சென்னை அணி சேசிங்கில் பலம் வாய்ந்த அணியாக வலம் வருகிறது, மும்பை, கொல்கத்தா அணிகளை கடைசிக்கு முந்திய பந்து வரை துரத்தி சென்று வென்றதும், ஐதராபாத்தை கடைசி பந்தில் வென்றதும், நமக்கு தண்ணி தராத பெங்களூரை ரெண்டு பந்து மீதி வைத்து அடித்தெல்லாம் வேற லெவல். அதைப்போல பஞ்சாப்பிடம் கடைசி பந்து வரை சென்று போராடி தோற்றதெல்லாம் வரலாற்றில் இடம்பிடிக்கும் ரகம்.
இன்று சென்னை அணி 200 ரன்களை அசால்ட்டாக சேஸ் செய்ய பழகிவிட்டது. ஏர்செல் சென்னை அணிக்கு ஸ்பான்ஸர் வழங்கிய காலத்தில் ("ஏர்செல்" ஞாபகம் இருக்கா மக்களே.) சென்னை அணி விளையாடும் தினத்தில், 164 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், சென்னை அணி 164 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால், அந்த ரன்னானது பணமாக டாப்-அப் ஆகும் என வாடிக்கையாளர் வாய் பிளக்கும் ஆஃபரை அறிவித்திருந்தது.
அதாவது 164 ரன் என்பது நல்ல ஸ்கோராக பார்க்கப்பட்டது. அந்த ரன்னை தாண்டவே சிரமப்பட்ட காலம் அது. ஆனால் இன்று அப்படியல்ல, 200 ரன்களை சாதாரணமாக தாண்ட முடிகிறது. காரணம் நல்ல பேட்டிங் ஆர்டர் என்றாலும், அந்த 200 ரன்களை அடிக்க என்ன காரணம்... "நம்ம பௌலர்கள் குடுத்த ரன்னு இல்லயா.... அடிக்க வேண்டாமா பின்ன..." என்ற மதுரை ஸ்லாங்கில் சென்னை ரசிகனின் மைண்ட் வாய்ஸை கேட்க முடிகிறது.
200 ரன்களை சேஸ் செய்வது சாதனையாக பார்க்கப்பட்டாலும், முதலில் ஏன் எதிரணிக்கு 200 ரன்கள் கொடுத்தீர்கள் என்ற கேள்வியும் எழ வேண்டுமே... ஆக... சென்னை அணி பந்துவீச்சு துறையில் சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சென்னை இன்று பட்டியலில் முன்னணியில் இருந்தாலும், ஆரஞ்ச் ஆர்மி என அழைக்கப்படும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்திடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி என்ன சாதித்துவிட்டது அந்த அணி... வாருங்கள் பார்க்லாம், ஐபிஎல் ஆரம்பிக்கும் முன்னரே, "வார்னர் அணியில் இல்லை" என்ற பெரிய ஆணியை தலையில் இறக்கிக் கொண்டே ஐதராபாத் அணி பந்தயக் குதிரையின் மேல் ஏறி அமர்ந்தது.
யாரும் எதிர்பார்க்கவில்லை, முதல் மூன்று போட்டியும் வெற்றி, இடையில் தவான் காயத்தால் விலக, இரண்டு போட்டிகளில் அந்த அணி சொதப்பியது. தவான் அணிக்கு திரும்பினாலும், கடைசி இரண்டு போட்டுகளில் பேட்டிங்கில் சொதப்பினார்கள். பதினோரு கோடி பாண்டே, யூசுப் பதான் போன்றோர் ஆடும் டெஸ்ட் மேட்ச் வகை ஆட்டத்தை பார்க்கும் போது, மாத்திரை போடாமலேயே தூக்கம் வந்துவிடுகிறது. விவிஎஸ் லக்ஸ்மணன் ட்ரெயினிங் அல்லவா...!
நமிபியா, கென்யா போன்ற அணிகளுக்கு டார்கெட் பிக்ஸ் பண்ணுவது போலவே சாதாரணமாக ஓடி ஓடி ரன் சேர்ப்பது சில சமயங்களில் நம்மை எரிச்சலடைய வைத்தாலும், பந்துவீச்சில் முனிப்பாய்ச்சல் பாய்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக ஆடவில்லை என்றாலும் பசில் தம்பி, சித்தார்த் கால், சந்தீப் சர்மா போன்ற உள்ளூர் வேகப்பந்து வீச்சாளர்களின் கடின உழைப்பால் இன்று உயர்ந்து நிற்கிறார்கள்.
பின்லேடன் மட்டும் தான் அணியில் இல்லை, ஷகிப் அல் ஹசன், ரஷித் கான், முகமது நபி போன்ற சர்வதேச அளவில் ஜொலிக்கும் தரமான சில ஆல்ரௌண்டர்களை அந்த அணி கொண்டுள்ளதால், எதிரணி எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தாலும் தைரியமாக மோதிப் பார்க்கிறார்கள்.
எதிரணியினர் "120-130 ரன்தானே... எளிதில் அடித்துவிடலாம்" என்று நம்பிக்கை கொள்கிறார்களோ இல்லையோ... அதைவிட பல மடங்கு நம்பிக்கை வைக்கிறார்கள் ஆரஞ்ச் ஆர்மியினர்... "10 விக்கெட் தானே... எளிதில் சாய்த்துவிடலாம்" என்று.
அதிரடி ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாததால், மும்பைக்கும் பஞ்சாபிற்கும் இவர்கள் நிர்ணயித்த ரன்கள் வெறும் 118-132 ரன்கள் தான்... ஆனால் திறமையான பந்துவீச்சின் மூலம் அவர்களை சுருட்டியது வெறும் 87-119 ரன்களில். ஆனாலும் டாப்-4 பட்டியலில் இவ்வளவு நாள் தாக்குபிடித்து வந்தது ஆரஞ்ச் அர்மிக்கு பெரிய விஷயம் தான்.
ஆக... (இது ஸ்டாலினின் காப்பிரைட் டயலாக் என்பதால் பயன்படுத்த கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு) சென்னை அணிக்கு 200 ரன்களை எளிதாக அடிக்க தெம்பு இருந்தாலும், எதிரணியை குறைவான ரன்களில் கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லாவிடில்... அரைஇறுதியில் சன் ரைசர்ஸிடம் சரண்டர் ஆக வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம்.