சிறைகளில் உள்ள கைதிகள் கைபேசிகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதுமு உள்ள 9 மத்திய சிறைகளில் ரூ.5.40 கோடி செலவில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு வருவதாக சிறைத் துறை கூடுதல் டிஜிடி தெரிவித்துள்ளார்.
சிறைகளில் உள்ள கைதிகள் போலீசாரின் ஆதரவினாலோ அல்லது போலீசாருக்கே டிமிக்கி கொடுத்தோ சட்டவிரோதமாக செல்போன்களை தாராளமாக பயன்படுத்தி வருகின்றனர். சிறையில் கைபேசி பயன்பாட்டை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கைதிகளின் செயலில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.
இதனால், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது, தமிழக சிறை பாதுகாப்பு குறித்து நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், தமிழக சிறைத்துறை, கூடுதல் டிஜபி அசுதோஷ் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் உள்ள உயர் பாதுகாப்பு அடுக்குகளில், 12 கைப்பேசி ஜாமர் கருவிகளை பொருத்துவதற்கு தமிழக அரசு ரூ.5.40 கோடி ஒதுக்கி உள்ளது. இதன்படி, 9 மத்திய சிறைகளுக்கும் ஜாமர் கருவி வழங்கப்பட்டுவிட்டன.
குறிப்பாக, புழல் மற்றும் வேலூர் சிறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுவிட்டன. பிற சிறைகளில் ஜாமர் கருவி பொருத்தும் பணி விரைவில் முடிந்துவிடும். சிறை கைதிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதை தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது.
சிறைகளில் கூடுதலாக மேலும் 2 ஜாமர் கருவிகள் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க, அவ்வப்போது லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை சிறைக்குள் நடத்துகிறோம். இதன் மூலம், கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை 2,606 சிறு வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக1384 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளன ” என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.