சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிய நிலையில், அதிமுகவினர் மற்றும் பொது மக்கள் என பல்வேறு தரப்பினர் அவரது நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக அனுமதித்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே தினம் கடந்த ஆண்டு இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதாவின் மறைவை பெரும் பரபரப்புக்கு இடையே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜெயலலிதாவின் மரணச் செய்தியை கேட்டு தமிழகமே இருளில் மூழ்கியது. ஜெயலலிதாவின் உடல் பொது மக்களின் பார்வைக்காக வாலாஜா சாலையில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவை காண அங்கு லட்சக் கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜெயலலிதா, அவரது மரணத்திற்கு பிறகும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பேசப்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம், சசிகலாவின் புதிய அவதாரம், முதல்வராக பதவி ஏற்ற ஓ.பி.எஸ் சில தினங்களில் ராஜினாமா, அதிமுக இரண்டாக உடைந்தது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இழுபறி, என அடுத்தடுத்த திருப்பங்கள் தமிழகத்தையே திரும்பி பார்க்க செய்தது.
ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆன நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் இன்று மவுன பேரணி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், எம்.பிக்கள்., எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கறுப்பு பேட்ஜ் அணிந்து வாலாஜா ரோடு, விருந்தினர் மாளிகை வழியாக, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு குவிந்த பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றர்.