சென்னை: விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்று அளித்தார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறிய சரவணன், புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மனுதாரர் எந்த ஒரு பொதுநலமும் இல்லாமல் எந்த நோக்கத்திற்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்” என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கு சுய விளம்பரத்திற்காக தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி ரமேஷ் எச்சரிக்கை விடுத்தார்.