மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்.
அதிமுக-வின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள பதவி வகித்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தில், தொடர்ச்சியாக இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தவரும் அவரே.
கடந்த 2016, மே மாதம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறி மீண்டும் முதல்வராக ஆட்சி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார்.
இதையடுத்து ஓ.பி.எஸ் முதல்வராக்கப்பட்டார். பின்னர், சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளராக ஆனது, டிடிவி-யின் அரசியல் ரீ-என்ட்ரி,ஓ.பி.எஸ்-ஸின் தர்மயுத்தம், சசிகலாவின் சிறைவாசம், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பு, அதிமுக இரு அணிகளாக பிரிவு, டிடிவி தினகரன் கைது, நடராஜன் இறப்பு, சசிகலா குடும்பத்தில் பிளவு என ஜெயலலிதா இல்லாத இந்த இரண்டு வருடங்களில் அதிமுக பல மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது.
ஆனாலும், ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்தது தமிழக அரசு. மேலும், மெரினா கடற்கரையில் அவரை அடக்கம் செய்த இடத்தில் பிரமாண்ட நினைவிடம் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். நீட் தேர்வு சர்ச்சையால் தமிழக அரசு ஒரு புறம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ஓ.பி.எஸ்.ஸின் இந்த திடீர் விசிட் எதற்காக என்ற கேள்வி அரசியல் தளத்தில் எழுந்துள்ளது.
எது எப்படியோ, `ஒரு தண்டனை பெற்ற குற்றவாளிக்கு எப்படி அரசு சார்பில் நினைவிடம் அமைக்கலாம்’ என்ற கேள்வி மட்டும் எதிர்கட்சிகளிடமிருந்து ஓய்ந்தபாடில்லை.