ஆண்டுதோறும் நரபலி கேட்கும் ‘நீட்’ தேர்விலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க சட்டரீதியான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளாமல், மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாக செயல்பட்டால், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பாஜக தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், ‘‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக தன்னுடைய மகனை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது. அந்த குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
அந்நிலையில் இதை வைத்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ‘நீட்’ தேர்வு ஆண்டுதோறும் நரபலி கேட்கிறது என்று நாக்கு கூசாமல் பழி சொல்வது அந்த தேர்வை எதிர்கொண்ட மாணவர்களின் தன்னம்பிக்கையை சீர்குலைக்கும் என்பதை உணரவேண்டும்.
கடந்த ஆண்டு ‘நீட்’தேர்வில் அனிதாவின் மரணம் நரபலி என குறிப்பிடும் மு.க. ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் மதுவை கொண்டுவந்ததால் இன்றும் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சாராயத்தினால் தினம் தினம் பல உயிர்கள் இழந்து இளம் தாய்மார்கள் விதவைகளாக நிற்பதற்கு யார் காரணம்? இதற்கு சமீபத்திய உதாரணம் நெல்லை தினேஷ் மரணம்.
சென்ற ஆண்டு ‘நீட்’தேர்வால் தமிழகத்தில் 6,510 ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது உண்மை. தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் ‘நீட்’வருவதற்கு முன்பு 2 பேருக்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் கடந்த ஆண்டு ‘நீட்’தேர்வு வந்த பிறகு திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 28 கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு தான் கஸ்தூரி மகாலிங்கம் போன்றவர்கள் இன்று நம்பிக்கையோடு ‘நீட்’தேர்வு எழுதினார்கள்.
மிக துயரமான நேரத்தில் இந்த மரணத்தையும் வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழக எதிர்க்கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அதில் கூறியுள்ளார்.