கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வருகிற மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த இரண்டு மாதமாக கர்நாடகாவில் நடந்து வரும் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால், பாஜக, காங்கிரஸ், மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பரபரப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் இறந்துவிட்டதால் மற்ற 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். பல்வேறு கட்சிகள் சுயேச்சை என 2654 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் சித்தராமையா 224 தொகுதிகளையும் சுற்றி பிரச்சாரம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, முதலமைச்சர் சித்தராமையா, எடியூரப்பா, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி ராகுல்காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளார். இன்று மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் அனைவரும் இன்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனால் கர்நாடகாவில் வெற்றி பெறுவது பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் முக்கியமானதாக உள்ளது.
ஓட்டுப்பதிவை அமைதியாக முறையில் நடத்துவதற்கான ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அதிக அளவு ஓட்டுப்பதிவை நடத்த தேர்தல் கமிஷன் சில புதுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கர்நாடகா நாளை வாக்காளர்களுக்கு சிலிப் வழங்கும் பணியின் போது வாக்காளர்களுக்கு முக்கிய கட்சிகள் சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே பணப்பட்டுவாடாவைத் தடுக்க தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மே 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். மே 15 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.