`ஸ்மார்ட் ரிங்’ என்றழைக்கப்படும் மின்னணுப் பொருளை கண்டுபிடித்துள்ள தமிழக இளைஞர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
`மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்தார் நடிகர் கமல்ஹாசன். ரஜினிக்குப் பின்னர் அரசியல் களத்துக்கு வந்த கமல், அவரை முந்திக்கொண்டு புயல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறார்.
ட்விட்டரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக துடிப்புடன் அரசியல் களமாடி வந்த கமல் தற்போது களத்திலும் செயல்படத் தொடங்கி இருக்கிறார். அவரின் மநீம கட்சியின் சார்பில் தினம் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக தினம் தினம் வெளியாகும் அறிக்கைகளுக்கும் பஞ்சம் இல்லை. இந்நிலையில், `ஸ்மார்ட் ரிங்’ என்ற அதிநவீன தொழில்நுட்பப் பொருளை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டுபிடித்திருப்பதாக கமலுக்கு தகவல் வந்துள்ளது.
உடனே அவர்களை அழைத்து கமல் பாராட்டியது மட்டுமல்லாமல், செயல்முறை விளக்கத்தையும் கேட்டுள்ளார். இந்த ஸ்மார்ட் ரிங் மூலம், அவசர நேரத்தில் உதவி கோருவது சுலபம் என்று கூறப்படுகிறது. இன்னும் இது மார்க்கெட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொருளை உருவாக்கிய இளைஞர்களைச் சந்தித்த கமல், இது குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.