சென்னை, டிச.7: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், இறுதியாக 58 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்தது. அதிமுக பிளவு, கட்சி சின்னம் யாருக்கு சொந்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளால் இடைத்தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வரும் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி தேதி கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. இதில், மொத்தம் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்பட 73 பேரினது வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதன்பிறகு, வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு இன்று மாலை 3 மணியுடன் முடிந்தது. இதில், 14 பேர் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இறுதியாக 58 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணைய அதிகாரி வேலுச்சாமி இன்று தெரிவித்தார்.
இதன்மூலம், பெறும் சர்ச்சைக்கு உள்ளான நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.