`கட்சி தொடங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ரஜினி இனி மக்கள் பிரச்னைக்காக களத்துக்கு வர வேண்டும்’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், `காவிரி: நிரந்தரத் தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்’ என்ற கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின் பிரதான கோரிக்கையாக, `மத்திய அரசு, காவிரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்’ என்று முன்மொழியப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்க தமிழ்செல்வன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், லட்சிய திமுக-வின் தலைவர் டி.ராஜேந்தர், நடிகர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் பேசிய கமல், `இது ஒரு நாளில் முடியும் கூட்டமில்லை. தூங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை தட்டி எழுப்பும் கூட்டமாக இருக்கும்.
இது வெறும் கோஷமாக இருக்கப்போவதில்லை. நாங்கள் எங்களை தமிழர்களாக, விவசாயிகளின் நண்பர்களாக அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறோம். இது போன்ற கூட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருப்போம்.
இதை அதிகமாக பரப்புரை செய்யுங்கள். தான் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார். அவரும் இனி வரவேண்டும் என்பது எனது எண்ணம்’ என்று பேசினார்.