தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு

May 23, 2018, 07:05 AM IST

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் 100வது நாளாக நேற்று பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது. போலீசார் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதற்கும் ஒருபடி மேல போய் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், படுகாயம் அடைந்து பெண்கள் உள்பட இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்களும், வணிகர்களும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 100வது நாளாகிய இன்று (நேற்று) 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால், போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல உயிர்கள் பலியாகின. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த சம்பவத்துக்கு அரசின் மெத்தன போக்கே காரணம். எனவே அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். முழுமையான நச்சுத்தன்மை குறித்த விவரங்களை உடனடியாக ஆராய்ந்து அந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோவீ இழப்பீடு வழங்க வேண்டும்.

தூத்துக்குடி போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (இன்று) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து, நியாயம் கிடைக்காத பட்சத்தில் பேரமைப்பின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தை கூட்டி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை