தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் நேற்று நூறாவது நாளாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இது பின்னர் கலவரமாக மாறி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இதைதொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 10 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்கின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com